பேரூர் கிராமத்தில் நர்சரி அமைக்க இடம் அளவீடு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

மாமல்லபுரம்:  மாமல்லபுரம் அருகே நர்சரி அமைக்க இடம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் சில இடங்களில் நர்சரி அமைத்து, அதில் அனைத்து வகையான மரங்கள் வளர்த்து, ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளின் சாலையோரம் நட்டு பசுமையாக பராரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி ஊராட்சி தலைவரிடம் நர்சரி அமைக்க இடம் வழங்குமாறு ஒன்றிய நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று ஊராட்சி தலைவர் ரமணி கடந்த கிராம சபை கூட்டத்தில், பேரூர் கிராமத்தில் 75 சென்ட்டில் நர்சரி அமைக்க தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை திருப்போரூர் ஒன்றிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, அந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் 5க்கும் மேற்பட்டோர் இடம் அளவீடு செய்ய வந்தனர். இதையறிந்த, பேரூர் கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, இந்த இடம் மெய்க்கால் புறம்போக்கு இங்கு நர்சரி அமைத்தால் ஆடு, மாடுகள் எங்கு மேய்ச்சலுக்கு செல்லும் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும், இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் எஸ்.ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் இங்கு நர்சரி அமைக்க விடமாட்டோம். இன்னும், ஓரிரு நாளில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். அதுவரை, இங்கு எந்த பணிகளும் மேற்கொள்ள கூடாது’ என்றனர். இதனை தொடர்ந்து, போலீசார் கூறியதாவது, இன்னும் ஓரிரு நாட்களுக்கு எந்த வித பணிகளும் செய்ய கூடாது என இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நர்சரி, அமைக்க இடம் அளவீடு செய்ய வந்த திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: