பாதாள சாக்கடை திட்ட பணிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் எச்சரிக்கை

சென்னை: பாதாள சாக்கடை திட்ட பணிகளின்போது திடீர் ஆய்வில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை உரிய பாதுகாப்போடு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் தலைமை வகித்தார். செயல் இயக்குனர் எஸ்.ராஜகோபால் சுங்காரா, வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் பேசியதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.241.36 கோடி மதிப்பீட்டில் மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம் மற்றும் மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் பிரதான குழாய்கள் பதித்தல், இயந்திர நுழைவாயில்கள் அமைத்தல் மற்றும் வீட்டிணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணிகள் நடைபெறும் போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் எடுக்க வேண்டும்.  

சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பணிகள் நடைபெறுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி தடுப்பு பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.மேலும், பணிகள் நிறைவுற்ற பின்னர் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடி வாகனங்கள் செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் தகவல் பலகைகள் வைக்கப்படுவதோடு, பணியாளர்கள் ஒளிரும் உடைகள் அணிந்து பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து உரிய பாதுகாப்போடு அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.   திடீர் தணிக்கைகள் செய்யும்போது பாதுகாப்பு பணிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனைத்து ஒப்பந்ததாரர்களும் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை தொய்வின்றி செயல்படுத்தி உரிய கால அளவிற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும்’ என கூறினார்.

Related Stories: