என் பெயரை களங்கப்படுத்தும் வகையில் மோசடி புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் புகார்

சென்னை: என் பெயரை களங்கப்படுத்தும் வகையில் மோசடி புகார் அளித்த ஜி.கே.கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் சார்பில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நான் சுமார் 50 ஆண்டுகளாக பொதுப்பணியில் ஈடுபட்டு மக்களின் சேவையை எனது வாழ்க்கையாக கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறேன். கடந்த 2011-16ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்து மக்களின் செல்வாக்கையும், நன்மதிப்பையும் பெற்றிருக்கிறேன்.

அமைச்சராக இருந்த போது மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 13ம் தேதி என் மீது ஜி.கே.கந்தசாமி என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் எனக்கு  எந்த வகையிலும் பரீட்சயமானவர் இல்லை. மேலும், அப்புகாரில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்த ஒரு தொகையையும் பெறவில்லை.  அப்புகாரை பற்றி அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர்களிடம் விசாரிக்கையில், அடிப்படையில் ஜி.கே.கந்தசாமி என்ற ஒரு நபர் அதிமுக வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு பொருளாளராக தற்போது இல்லை என்பதையும், மேலும், அவர் தனிப்பட்ட முறையில் பல நபர்களிடம் அரசு வேலை பெற்று தருவதாக பணம் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை திருப்பித்தர முடியாத  நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இதுபோன்ற ஒரு ஆதாரமற்ற பொய் புகாரை கொடுத்து திசை திருப்ப நினைத்திருக்கிறார் என்பதை அறிகிறேன்.இதுபோன்ற தொடர் புகார்கள் கொடுத்து வரும் ஜி.கே.கந்தசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: