×

கயத்தாறு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து சென்னை புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாப பலி: 11 பேர் படுகாயம்

கயத்தாறு: கயத்தாறு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ், நாகர்கோவில் வந்தபோது 28 பயணிகள், சென்னைக்கு ஏறியுள்ளனர். அங்கிருந்து இரவு 10.45 மணியளவில் புறப்பட்டு நெல்லை வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சோமநாதபுரத்தை சேர்ந்த பாண்டி (32) என்பவர் பஸ்சை ஓட்டினார்.

நள்ளிரவு 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள அரசன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்தததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், சென்டர் மீடியன் இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புற சாலையில் சென்று தலைகுப்புற கவிழ்ந்தது. பயணிகள் அலறல் சத்தத்தையடுத்து அவ்வழியாக சென்றவர்கள், கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கவிழ்ந்து கிடந்த பஸ்சின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழவண்ணாவிளையை சேர்ந்த சிவராமன் (33), திருவட்டாறு புத்தன்கடையை சேர்ந்த ஜீசஸ் ராஜன் (47), ஆம்னி பஸ் டிரைவர் பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த செங்கல்பட்டு சாலூரை  சேர்ந்த யுகந்தி (30), குரோம்பேட்டை விநாயகம் (30), சென்னை புதுவண்ணாரபேட்டை குமார் (35), திருவொற்றியூர் சூரியபிரகாஷ் (25), குமரி மாவட்டம்  தக்கலை மதன்குமார் (32),  திருவட்டாறு விக்டர் (56) ஆகிய 6 பேர் நெல்லை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 5 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான சிவராமனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான திருமணம் நடந்துள்ளது. சென்னையில் தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்த இவர், மனைவி விஜயலட்சுமியுடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். அதிர்ஷ்டவசமாக விஜயலட்சுமி காயமின்றி தப்பினார். தனது கண் முன் கணவர் இறந்ததை கண்டு விஜயலட்சுமி கதறி அழுதது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Omni ,Kayatharu ,Puthumappillai , Omni bus overturns near Kayatharu, 3 killed, 11 injured, including Chennai Puthumappillai
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து