தேனி மாவட்ட பேரூராட்சிகளில் எல்இடி பல்பு வாங்கியதில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1.14 கோடி முறைகேடு: 10 பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு

தேனி: அதிமுக ஆட்சிக்காலத்தில் தேனி மாவட்ட பேரூராட்சிகளில் எல்இடி பல்பு வாங்கியதில் ரூ.1.14 கோடி அளவிற்கு முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 10 பேரூராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சிக் காலமான 2019-20ம் ஆண்டில் எல்இடி பல்புகள் மற்றும் உபகரணங்கள் வாங்கியதில், ரூ.1 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2020, ஜூன் மாதம் பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், 2019-20ல் பேரூராட்சிகளில் எல்இடி பல்புகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலையை காட்டிலும் அதிக விலை கொடுத்து வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

முறைகேடு செய்ததாக தேனி மாவட்ட பேரூராட்சிகளின்  முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கே.பாலசுப்ரமணி, தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், க.புதுபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.பாலசுப்ரமணி, கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் பசீர் அகமது, ஒப்பந்ததாரர்கள் ஜமுனா, ரவி ஆகிய 13 பேர் மீது கடந்த 10ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு பதிவு குறித்த அறிக்கையை நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா, டிஎஸ்பி சுந்தரராஜன் ஆகியோர், தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமர்ப்பித்தனர். இதில், 2019-2020ம் ஆண்டில் அரசு அங்கீகரித்த தொகையை காட்டிலும் சுமார் 7 முதல் 10 மடங்கு வரை அதிக விலை கொடுத்து எல்இடி பல்புகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் வாங்கி ரூ.1 கோடியே 14 லட்சம் அளவிற்கு முறைகேடு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் நடந்துள்ள இந்த ஊழல் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: