×

போலி வணிக நிறுவனங்கள் தொடங்குவதை தடுக்க புதிதாக தொழில் தொடங்க பதிவு செய்பவரிடம் நேரில் ஆய்வு: மாநில வரி விதிப்பு அதிகாரிக்கு அதிகாரம் பகிர்வு; தமிழக அரசு உத்தரவு

சென்னை: போலியாக வணிக நிறுவனங்களை தொடங்குவதை தடுக்கும் வகையில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக பதிவு செய்வோரை நேரில் சென்று ஆய்வு செய்ய, மாநில வரி விதிப்பு அதிகாரிக்கும் அதிகாரம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்வது 2017 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இடங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகே அவர்களை வணிகர்களாக பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் அவ்வாறு செய்வதில்லை.

இதை பயன்படுத்தி பலர் போலியாக வணிக நிறுவனங்களை தொடங்கி, லட்சக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போலி வணிக நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் பதிவை ரத்து செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதிதாக தொழில் தொடங்கும் வணிகர்கள் பதிவு செய்தவுடன், அவர்களின் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் வகையில் ஆணையரிடம் இருந்த அதிகாரம் தற்போது, உதவி ஆணையரிடம் (மாநில வரி அதிகாரி) மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை பிரிவு சட்டம் 2017ன்படி புதிதாக வணிகர்களாக பதிவு செய்வோர் எங்கு தொழில் செய்கின்றனர். அவர்களின் பான் கார்டு, தொலைபேசி எண், இமெயில் முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும். அவர்கள் வணிகம் செய்யும் இடங்களுக்கு ஆய்வு செய்ய வணிகவரி ஆணையருக்கு அதிகாரம் இருந்த நிலையில், தற்போது அந்த அதிகாரம் உதவி ஆணையர் (வரிவிதிப்பு அதிகாரி), துணை வரி விதிப்பு அதிகாரியிடம் மாற்றி அமைக்கப்படுகிறது. இனி வருங்காலங்களில் புதிதாக தொழில் தொடங்க பதிவு செய்வோரின் இடங்களுக்கு சென்று அவர்கள் நேரில் ஆய்வு செய்யலாம்.


Tags : Government of Tamil Nadu , In-person inspection of a new business start-up to prevent the launch of bogus businesses: devolution of power to the state tax authority; Government of Tamil Nadu order
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...