தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ள 6 தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ள 6 தேர்தல் சீர்திருத்தங்களையும் ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. 18 வயது நிறைவடைந்தவர்களை 4 தகுதிக்கான நாட்களை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதும் ஜனநாயகத்தை வலுப்படுத்த மிகவும் அவசியமானது.  6 சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன்  ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும்  வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

Related Stories: