×

கலசப்பாக்கம் அருகே முதன்முறையாக ஏரியில் மீன்பிடி திருவிழா: கிராம மக்கள் போட்டி போட்டு உற்சாகம்

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே உள்ள ஏரியில் முதன்முறையாக இன்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான கிராம மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பல ஆண்டுகளாக நிரம்பாத ஏரி, குளங்கள், கன்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.

இதேபோன்று கலசப்பாக்கம் அருகே உள்ள அணியாலை கிராமத்தில் உள்ள பெரிய ஏரி 18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இந்த ஏரி நிரம்பியதால் சுற்றுவட்டார விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக பெரிய ஏரி தண்ணீரைக்கொண்டு விவசாய பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது கடும் வெயில் வாட்டி வருவதால் பெரிய ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளது. இதில் அதிகளவில் பல்வேறு வகையான மீன்கள் இருப்பதால் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று முதன்முறையாக பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இதையறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக வலைகளுடன் காலை 6 மணி முதலே திரண்டனர். இதையடுத்து பூஜை செய்து மீன்பிடி திருவிழா ெதாடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.  கட்லா, விரால், ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. இவற்றை பிடித்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று சமைத்து ருசித்தனர். மேலும் பலர் ஏரிக்கரை அருகிலேயே சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து உணவு சமைத்து சாப்பிட்டனர். இதனால் அணியாலை கிராமத்தில் மீன்பிடி திருவிழா களைகட்டியது.


Tags : Kalasapakam , Kalasapakkam, lake fishing festival, villagers cheer
× RELATED முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி: மின்சாரம் பாய்ந்து இருவர் பலி