×

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டில் திகார் சிறை கைதி ஆஜர்: 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு விசாரணை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் சாதிக் அலி (வயது 30). வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (34). இருவரும் நண்பர்கள். குமரி மாவட்டத்தில் போர்வை விற்பனை செய்வதற்காக இருவரும் நாகர்கோவில் வந்தனர்.

அங்கு மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். சாதிக் அலிக்கும், ரபீக்கிற்கும் தொழிலில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை எழுந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது அவர்களுக்கிடையே பணப்பிரச்சினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாசிம் என்ற முன்னா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாதிக் அலியை குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இதைதொடர்ந்து, வாசிம் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகி விட்டார். இந்த கொலை சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாசிமை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.

இதற்கிடையே டெல்லியில் ஒரு கொலை வழக்கில் வாசிம் கைது செய்யப்பட்டார்.  திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது நாகர்கோவிலில் நண்பரை கொலை செய்தது டெல்லி போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் டெல்லியில் மட்டும் வாசிம் மீது 4 கொலை வழக்குகள் உள்ளன என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமானது. டெல்லி போலீசார் மூலம் இந்த தகவலை அறிந்த கோட்டார் போலீசார், வாசிமை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உத்தரவு பெறப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி, வாசிமை கடந்த 2018ம் ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லியில் இருந்து நாகர்கோவில் அழைத்து வந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டார்.

இந்த கொலை வழக்கு விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று நாகர்கோவில் கோர்ட்டில் வாசிமை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லியில் இருந்து ரயில் மூலம் அதிகாலையில் வாசிமை நாகர்கோவில் கொண்டு வந்தனர்.  சுமார் 10 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் வாசிமை அழைத்து வந்தனர். நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வாசிம், பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையொட்டி கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags : Dikar ,Ajar ,Nagarkovil ,court , Gun police security, Tihar jail inmate Azhar, murder case investigation
× RELATED திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர்...