×

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை களமிறக்க தீர்மானம்: ஆலோசனைக்குப் பின் மம்தா பானர்ஜி பேட்டி

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2ம் தேதி சரிபார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4,033 மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

அவர்களின் வாக்கு மதிப்பு என்பது மக்கள் தொகையில் கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு, உத்தர பிரதேச எம்எல்ஏவுக்கு அதிகமான வாக்கு மதிப்பு இருக்கும். மக்கள் தொகை குறைவாக கொண்ட வடகிழக்கு மாநில எம்எல்ஏக்களின் வாக்குமதிப்பு குறைவாக இருக்கும். மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,706 ஆக உள்ளதால், அக்கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் உள்ளன. 51 சதவீதத்தை எட்டிப்பிடிக்க 13 ஆயிரம் வாக்கு மதிப்புகள் மட்டுமே தேவை.

அதேசமயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகள் உள்ளன. எனவே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது. இருந்தும் எதிர்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஆளும் பாஜகவுக்கு எதிரான ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, ஜெ.எம்.எம். உள்ளிட்ட காட்சிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி; குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை களமிறக்க நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை நிறுத்த முடிவு செய்தோம்; ஆனால் அவர் மறுத்துவிட்டார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் விவாதித்தோம். இது நல்ல தொடக்கம். பல மாதங்கள் கழித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து முடிவெடுப்போம் இவ்வாறு கூறினார்.


Tags : Mamata Banerjee , Opposition decides to field common candidate in Presidential elections: Mamata Banerjee interview after consultation with Opposition
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...