×

நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த போது பரிதாபம் ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி: கயத்தாறு அருகே நள்ளிரவில் விபத்து

கயத்தாறு: கயத்தாறு அருகே நள்ளிரவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் பலியாயினர். 11 பேர் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 11 மணிக்கு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 28 பயணிகள் பயணம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், சோமநாதபுரத்தை சேர்ந்த முருகன் மகன் பாண்டி (32) என்பவர் பஸ்சை ஓட்டினார்.

நள்ளிரவு 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பை உடைத்து கொண்டு எதிர்புற சாலையில் தலைகுப்புற பஸ் கவிழ்ந்தது. தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். அப்போது அந்த சாலை வழியாக கார் மற்றும் டூ வீலரில் சென்றவர்கள், கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்து இடிபாடுகளுக்கிடையில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகர்கோவில் கீழவண்ணாவிளையை சேர்ந்த குமரேசன் மகன் சிவராமன் (33), கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு புத்தன்கடையை சேர்ந்த ஜோசப் மகன் ஜீசஸ் ராஜன் (47), பஸ் டிரைவர் பாண்டி ஆகியோர் இறந்தனர். மேலும் படுகாயமடைந்த 11 பேரில் 6 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். டயர் வெடித்ததில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.

டயர் வெடித்ததால் விபரீதம்
கயத்தாறு அருகே அரசன்குளம் ரோட்டில் ஆம்னி பஸ் வந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க வலதுபுற டயர் வெடித்துள்ளது. இதில் வலது புறமாக இழுக்கப்பட்ட பஸ் அசுர வேகத்தில் தடுப்பு அரணில் மோதி மதுரையில் இருந்து நெல்லைக்கு வரும் ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் அந்த வாகனங்கள் மீது பஸ் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

இரவு 11 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஆம்னி பஸ், ஒரு மணி நேரத்தில் கயத்தாறு வந்துள்ளதால், டயர் வெடித்ததில், பஸ்சின் வேகம் அதை அடுத்த ரோட்டுக்கு தூக்கி வீசியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆம்னி பஸ் வந்த திசையில் இடது புறத்தில் 10அடிக்கும் மேற்பட்ட பள்ளம் உள்ளது. இடது புற டயர் வெடித்திருந்தாலும் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Omni ,Chennai, Nagercoil , Omni bus overturns in Nagercoil
× RELATED திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...