தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் திருத்தியமைக்கப்பட்டு தலைவராக திரு.ஏ.நாராயணன் நியமனம்

சென்னை: தமிழகத்தில் பனைமரத் தொழிலாளர்களின் நலனிற்காக 1.09.2006 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியமானது  2010-ஆம் ஆண்டு திரு. குமரிஅனந்தன் அவர்களை தலைவராகக் கொண்டு இறுதியாக திருத்தியமைக்கப்பட்டு, இவ்வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் 18.08.2012 அன்றுடன் முடிவடைந்தது.

பனைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் திருத்தியமைக்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 14.6.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, திரு. ஏ.நாராயணன் அவர்களை தலைவராகவும், அலுவல் சார் உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆகியோரும், அலுவல்சாரா உறுப்பினர்களாக வேலையளிப்போர் பிரதிநிதிகளாக - திரு.அக்ரி கா. பசுமைவளவன், திரு. எம். அந்தோணி ஸ்டீபன், திரு.எஸ்.காட்சன் சாமுவேல், திருமதி ஜி.கலாவதி, திரு. டி.ஆன்டோ பிரைடன், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக - திரு.சி.ஞானதாஸ், திரு.பி.சிங்காரன், திரு. ஆர்.சடையப்பன், திரு.டி.பழனிசாமி, திரு. ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: