×

மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது என அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள் மேகதாது அணை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை இன்று (15.06.2022) பல செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. அவ்வறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல.

மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனையாகும். இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ, தமிழ்நாடு அரசிற்கு இல்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனை குறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல் ஆதாயத்திற்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும் மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். கர்நாடக அரசின் அதிகாரிகள் இது குறித்து மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்களுக்கு சரியான தகவல்கள் அளிக்கவில்லை போலும்.

இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது பற்றிய விவரங்கள் கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி நடுவர் மன்றம் படுகை மாநில வாரியாக திட்டங்களை ஆராய்ந்து, திட்ட வாரியாக ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு நீர்த் தேவை என்பதை கணக்கிட்டு நீரை பங்கீடு செய்துள்ளது. சில திட்டங்களை நிராகரித்தும் உள்ளது. இதனை உச்சநீதிமன்றம் தனது 16.02.2018 ஆணையில் முழுமையாக உறுதி செய்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில், அதுவும் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சி தத்துவத்தின்படியும், மாநிலங்கள் உச்சநீதிமன்ற ஆணையை மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்கு புறம்பானது.

மேலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது (பத்தி 446.7). கர்நாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர்த் தேவைக்காக என்ற போர்வையில், அதுவும் 4.75 டி.எம்.சி தேவைக்காக, 67.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல,

உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Karnataka government ,Meghadau ,Minister ,Duraimurugan , Karnataka government's attempt to build a dam in Meghadau is illegal: Minister Duraimurugan condemned
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...