×

பஞ்சாபி பாடகர் கொலை வழக்கு; பிரபல தாதா மாஜிஸ்திரேட் முன் ஆஜர்: 7 நாள் போலீஸ் காவலில் விசாரணை

மான்சா: பஞ்சாபி பாடகர் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் நள்ளிரவு மான்சா நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு  முன்னதாக பஞ்சாபி பாடகர் சித்து  மூசே வாலா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது நடந்த தேர்தலில்  ஆம்ஆத்மி கட்சி  ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து பஞ்சாப் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட  424 பிரபலங்களின் பாதுகாப்பு  வாபஸ் பெற்றது. அதில், பாடகர் சித்து மூசே வாலாவும் ஒருவராவார்.  

இந்நிலையில் பாதுகாப்பு வாபஸ் பெற்ற அடுத்த நாளான கடந்த மே 29ம் தேதி  பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத  நபர்களால் சித்து மூசே வாலா சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்த நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதியான பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்க்கும், சித்து மூசே வாலா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதினர். அதனால், அவரை கைது  செய்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில், பஞ்சாப் காவல்துறை முறையிட்டது.

நீதிமன்றம் அனுமதி  அளித்ததை அடுத்து, லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்றிரவு அழைத்துச்  செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் மான்சா நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது லாரன்ஸ் பிஷ்னோயை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பஞ்சாப் காவல்துறைக்கு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து இன்று முதல் 7 நாட்கள் சித்து மூசே வாலா கொலைக்கு பின்னால் உள்ள சதிகள் என்ன? என்பது குறித்து தெரியவரும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



Tags : Dada Magistrate , Punjabi singer murder case: Celebrity Dada in police custody
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...