×

3வது டி.20 போட்டியில் 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பாராட்டு

விசாகப்பட்டினம்: இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 3வது டி.20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 (35 பந்து,7 பவுண்டரி,2 சிக்சர்), இஷான்கிஷன் 54( 35 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்டியா நாட் அவுட்டாக 31 (21 பந்து,4 பவுண்டரி) ரன் அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணி 19.1ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசென் 29, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 23, வெய்ன் பார்னெல் நாட்அவுட்டாக 22  ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் ஹர்சல் பட்டேல் 4,  யுஸ்வேந்திர சாஹல் 3 , அக்சர்பட்டேல், புவனேஸ்வர்குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 3 விக்கெட் எடுத்ததுடன் 2 கேட்ச் பிடித்த சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் முடிவில் 2-1 என தென்ஆப்ரிக்கா முன்னிலை வகிக்க 4வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடக்கிறது.

ரிஷப் பன்ட் தலைமையின் கீழ் இந்தியா முதல் வெற்றியை பெற்றது. அவர் கூறியதாவது: ‘’15 ரன் குறைவாக அடித்தோம். இருப்பினும், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பவுலர்கள்  சிறப்பாக செயல்பட்டு, அசத்தினர். குறிப்பாக, ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். பேட்டர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தினர். துவக்கத்திலேயே விக்கெட்களை வீழ்த்திவிட்டால், அடுத்து வரும் புது பேட்டர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படும். இதைத்தான் பவுலர்கள் செய்தனர். இப்போட்டியில் நாங்கள் செய்த சின்ன சின்ன தவறுகள், அடுத்த போட்டியில் இந்த தவறுகள் நடக்காத வகையில் பார்த்துக்கொள்வோம். குறிப்பாக, மிகப்பெரிய வெற்றியை பெற திட்டங்களை வகுப்போம்’’ எனத் தெரிவித்தார்.

தோல்வி குறித்து தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா பேசுகையில், “இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்காக முயற்சிக்க கூட இல்லை. ஆனால் இந்தியா மிக சிறப்பாக விளையாடியது, குறிப்பாக பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு எங்கள் பேட்ஸ்மேன்கள் மீது அதிக அழுத்தத்தை கொடுத்தது. பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டோம். அதே போல் பேட்டிங்கிலும் சொதப்பிவிட்டோம், ஒரு பார்ட்னர்ஷிப் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. முதல் இரண்டு போட்டியிலும் மிக சிறப்பாக விளையாடினோம், ஆனால் இந்த போட்டி அதற்கு நேர் எதிரானது. முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்டால் அந்த போட்டியில் தோல்வி தான் கிடைக்கும், தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.

Tags : India ,T20 ,Rishabh Punt , 3rd T20 match, India win, bowlers, captain Rishabh Punt,
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...