குன்னூரில் 98 பயனாளிகளுக்கு ரூ.15.60 கோடி கடனுதவி: வனத்துறை அமைச்சர் வழங்கினார்

ஊட்டி: குன்னூர் உபாசி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 98 பயனாளிகளுக்கு ரூ.15.60 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நீலகிரி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம், அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்தும் வாடிக்கையாளர்களுடன் தொடங்கும் நல்லுறவு தொடரும் நல்லுறவு கடன் வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் உபாசி அரங்கில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்து 98 பயனாளிகளுக்கு ரூ.15.60 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 75வது சுதந்திர அமுத பெருவிழாவின் ஒருபகுதியாக வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடன் மேளா அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் எந்த தொழில் செய்தால் வருமானத்தை பெருக்க முடியும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்றார் போல் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க வேண்டும். வங்கி சேவையானது மக்களுக்காக தான். நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள் இணைந்து சுய உதவிக்குழு கடன், தனிநபர் கடன், தாட்கோ கடன், வீட்டுக்கடன், வாகன கடன், பல்வேறு ெதாழில் கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என மொத்தம் 3347 பயனாளிகளுக்கு ரூ.54 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று சரியான முறையில் அதனை திரும்ப செலுத்துவதன் மூலம் மென்மேலும் அதிக அளவில் கடன் பெற்று பெரிய தொழில் செய்து வாழ்ககையில் நல்ல நிலைக்கு வர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திருமலராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, மாவட்ட தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: