×

புதுக்கோட்டை, திருவாரூர் கடற்கரைகள் நவீனப்படுத்தி சுற்றுலா தலமாக்கப்படும்

திருப்போரூர்: புதுக்கோட்டை, திருவாரூர் கடற்கரைகள் நவீனப்படுத்தப்பட்டு சுற்றுலா தலமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ஒன்றிய அரசு சார்பில் நீலக்கடற்கரை என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவளம் கடற்கரையில் அதிநவீன உணவகம், விளையாட்டு கூடம், ஓய்வு அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் மதிவேந்தன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:  இந்தியாவிலேயே சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழக கடற்கரைகளிலேயே கோவளம் கடற்கரைக்கு நீலக்கடற்கரை என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவகம், விளையாட்டு உபகரணங்கள், தங்கும்அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதி செய்யப்பட்டுள்ளது. காலை முதல் இரவு வரை கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலில் குளிக்க தேவையான பாதுகாப்பு கருவிகளும் உள்ளன. அதுமட்டுமின்றி எப்போதும் நீச்சல் வீரர்கள் இருப்பார்கள். இவர்கள் கடலில் தவறிவிழும் நபர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுவர். இதற்காக குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் மன உளைச்சலுடன் இருந்த காலகட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த நீலக்கடற்கரை உள்ளது. இதுபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்குழா கடற்கரை, திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கடற்கரை ஆகியவற்றை அனைத்து வசதிகளுடன் நவீனப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, ஒன்றிய ஆணையாளர் பூமகள் தேவி, கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் சுந்தர், துணைத்தலைவர் ஆதிலட்சுமி பெருமாள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக முட்டுக்காடு படகுத்துறை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Pudukkottai ,Thiruvarur , Pudukkottai, Thiruvarur Beach, Tourist spot,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு