×

வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் திரளான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று வைகாசி பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அதிகாலை 2 மணி முதலே தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன் குவிந்தனர். கூட்டம் அதிகரித்ததால் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. தாணிப்பாறை செக்போஸ்ட்டில் பக்தர்களின் உடைமைகளை வனவர் சின்னகருப்பன் தலைமையில் வனத்துறையினர் சோதனை செய்து பாலித்தீன் பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகாசி பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், தண்ணீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Saduragiri ,Vaikasi , Devotees throng Vaikasi Pavurnami at Chaturagiri
× RELATED போடி பகுதியில் தொடர்மழையால் தள்ளிப்போன மாங்காய் சீசன்