×

நாகை: மீன்களை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் மறியல்

நாகை: நாகை மாவட்டம் பட்டினச்சேரி அருகே மேல பட்டினச்சேரி, கீழ பட்டினச்சேரி உள்ளது. இது மீனவ கிராமங்களாகும். இந்த கிராமங்களில் தலா 5 விசைப்படகுகள், 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. தலா 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். கீழ பட்டினச்சேரியில் மீன்பிடி இறங்குதளம் உள்ளது. இன்று காலை பைபர் படகுகளில் மீன் பிடித்து கொண்டு மீன்பிடி இறங்கு தளமான கீழ பட்டினச்சேரிக்கு மேலபட்டினச்சேரி மீனவர்கள் வந்தனர்.

இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தில் தாங்கள் பிடித்து வந்த மீன்களை ஏலம் விடுவதற்கு மேலபட்டினச்சேரி மீனவர்கள் முயன்றனர். அப்போது அங்கு வந்த கீழ பட்டினச்சேரி மீனவர்கள், ‘இனிமேல் நீங்கள் இங்கு மீன்களை ஏலம் விடக்கூடாது’ என்று தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரடைந்து மேல பட்டினச்சேரியை சேர்ந்த மீனவர்கள், நாகை- நாகூர் சாலை வாஞ்சூர் அருகே தாங்கள் பிடித்து வந்த மீன்களை தரையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை டவுன் டிஎஸ்பி சரவணன், தாசில்தார் அமுதா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘நாங்கள் இதுவரை கீழ பட்டினச்சேரி மீன்பிடி இறங்குதளத்தில் தான் மீன்களை பிடித்து வந்து ஏலம் விட்டு வருகிறோம். இப்போது திடீரென மீன்பிடி இறங்குதளத்தில் ஏலம் விடக்கூடாது என்கின்றனர். மீன்பிடி இறங்குதளத்தில் எங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்றனர்.

அதற்கு, ‘பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்’ என்று அதிகாரிகள் கூறியதால் மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Nagai , Fishermen stir, refuse rather than auction, jewelry fishermen
× RELATED வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை...