×

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்த 7 ஆயிரம் மது பாட்டில்கள் அழிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, ₹10 லட்சம் மதிப்பிலான அண்டை மாநில மதுபானங்கள் முறைப்படி வனப்பகுதியில் கொட்டி, எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக, மாநில எல்லைப் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், சிறப்பு மதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு போலீசார் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.

இரண்டு மாதங்களில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை ஆகிய காவல்துறை மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளில், அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட, சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள் கொண்ட மதுபானங்கள் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்தவர்களை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, சுமார் ரூ. 10 லட்சம்  மதிப்பிலான மதுபானங்களை, காவல்துறையினரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத மது பானங்களை ேநற்று எஸ்பி சரோஜ் குமார் தாகூர் மற்றும் ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பொக்லைன் மூலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இது குறித்து எஸ்பி.சரோஜ் குமார் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஆகிய மூன்று மதுவிலக்கு மண்டல பிரிவுகளில் 7,153 அண்டை மாநில மதுபாட்டில்கள், 1287 லிட்டர் அளவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மது வகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை கர்நாடக மாநில மதுபானங்களாக இருக்கின்றன. சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான இந்த சட்ட விரோத மதுபானங்கள் முறைப்படி காட்டுப்பகுதியில் குழிதோண்டி, பொக்லைன் கொண்டு அழிக்கப்பட்டது. மேலும், தற்போது மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் கணிசமாக குறைந்துள்ளது. காவல்துறையினரின் தொடர் நடவடிக்கையால், இதுபோன்ற சட்ட விரோதமாக கடத்தப்படும் அண்டை மாநில மதுபானங்கள், போதை பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்.அதேபோல சாலைகளில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகசம் என்ற பெயரில், ஆபத்தை உணராமல் விளையாடி வருவது குறித்த புகாரின் பேரில், துரிதமாக உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : Karnataka , Destruction of 7,000 bottles of liquor smuggled from Karnataka
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...