திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்ச்சி பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்ச்சி பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பக்தர்கள் வசதிக்காக 4 பேட்டரி கார்களை துவக்கி வைத்தனர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பல்வேறு வளர்ச்சி பணிகளின் மாதிரி வரைபடத்தை, விருந்தினர் மாளிகையில் வைத்து  பார்வையிட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள சுகாதார வளாகத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் எளிதாக கோயில் வளாகத்தை சுற்றி வரும் வகையில் 4 புதிய பேட்டரி வாகனத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேட்டரி காரில் பயணம் மேற்கொண்டனர். பின்னர் கோயிலில் ரூ.300 கோடியில் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளையும் மற்றும் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளையும் பார்வையிட்டனர். தரிசனத்துக்காக வந்திருந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் தரிசன பாதையில் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி, தொலைக்காட்சி வசதியுடன் சுமார் 250 பேர் அமர்ந்து செல்லும் படியான காத்திருக்கும் அறைகள் அமைப்பது, தரிசன நேரத்தை குறிக்கும் வகையில் பக்தர்கள் கையில் குறியீட்டு சீட்டு (டேக்) வழங்கிடுவது, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு பேருந்து நிலையம் அருகில் இடம் ஒதுக்கி வணிக வளாகம் அமைப்பது குறித்து ஆலோசித்தனர்.

 திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் கட்டுமான பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர்கள், விரைவாக பணிகளை முடிக்க வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கேற்ப 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவற்காக தமிழகம் முழுதும் ஆய்வு நடந்து வருகிறது. திருச்செந்தூர் கோயிலில் நடைபெறக்கூடிய திருப்பணிகள் குறித்து எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி சிதம்பரம்போல் ரகசியம் அல்லாமல் சிதம்பர ரகசியமின்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெறுவதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் துவங்கப்படும். திருச்செந்தூர் கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, என்றார். ஆய்வின் போது சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கோயில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி கமிஷனர் வேலவன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகராட்சி சேர்மன் சிவஆனந்தி, நகர செயலாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், செந்தில்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வீரமணி, பொன்முருகேசன், அருணகிரி, கேடிசி முருகன், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பரிசமுத்து, நம்பிராஜன், சந்திரசேகரன், சித்தன், கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: