×

வளர் 4.0 வலைதளத்தை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மனோ தங்கராஜ்

சென்னை: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட வளர் 4.0 வலைதளத்தை அமைச்சர்கள் திரு தா மோ அன்பரசன் மற்றும் திரு த மனோதங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் மற்றும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த.மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று (15.06.2022) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட Valar 4.0 வலைத்தளத்தை (valar.tn.gov.in) தொடங்கி வைத்தனர்.

தேசிய அளவிலான உயர்திறன் மையங்கள் மற்றும் தொழில் முனைவோர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. இதில்,  குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாகவுள்ளது. மாநிலத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துக்களைப் பரிமாறவும், பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகாணவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் $ பொருளாதாரம்” என்ற இலக்கை அடையவும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை  Valar 4.0 வலைத்தளத்தை உருவாகியுள்ளது.

இந்த வலைத்தளத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள், மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும். இவ்வலைத்தளத்தில் தொழில் துறையினர், சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், உணவுபதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருட்களின் தொகுப்புத் தேவைகள் (Packaging Requirements)  போன்ற பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் Valar 4.0 வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.  29 நகரங்களிலிருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின், விவரங்கள் இந்த வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்தைத் தமிழ்நாடு மின்னாளுமை முகமை, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IITM) உறுதுணையுடன் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் நீரஜ் மித்தல்,

இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலாளர், திரு. வி.அருண் ராய், இ.ஆ.ப., மின்னாளுமை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் திரு. ராபர்ட்    ஜெரார்ட் ரவி, இ.தொ.ப., இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் வி. காமகோடி (காணொலி காட்சி வாயிலாக) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thamo Anparasan ,Mano Thankaraj , The Valar 4.0 website was launched by Ministers Thamo Anparasan and Mano Thankaraj
× RELATED வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்