×

பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு பிக்கட்டி தேயிலை தொழிற்சாலையை விவசாயிகள் முற்றுகை

மஞ்சூர்: பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறை அமல்படுத்தியதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. பிக்கட்டி, முள்ளிகூர், பாரதியார் நகர், கெரப்பாடு, குந்தாகோத்தகிரி, சிவசக்திநகர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்.

இவர்களிடம் இருந்து தினமும் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலையில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், பிக்கட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநியோகிக்க முடியும்.

தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தங்களிடம் இருந்து குறைந்த அளவு பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாய உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் மேலும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், மேலும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். தொடர்ந்து பசுந்தேயிலை கொள்முதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மஞ்சூர் எஸ்ஐ ராமசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசம் அடைந்த விவசாயிகள் தொழிற்சாலை நுழைவுவாயில் அருகே சென்று தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். விவசாய உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசிய நிர்வாக இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைப்படுத்த வேண்டும் என வலிறுத்தினர்.

இதுகுறித்து பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் அருள்செல்வன் கூறியதாவது: பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி திறன் 20 ஆயிரம் கிலோவாக உள்ளது. ஆனால், தேயிலை மகசூல் அதிகரிப்பு காரணமாக பசுந்தேயிலை வரத்து இரு மடங்காக உள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களாக அங்கத்தினர்களிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது. இது குறித்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி நிர்வாக தரப்பில் அழைப்பு விடுத்தபோது அவர்கள் உடன்படவில்லை.

அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கருதியதை தொடர்ந்து வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகித்து வருகின்றனர். தனியார் பசுந்தேயிலை வாங்குவதை நிறுத்தும்போது கூட்டுறவு தொழிற்சாலைக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pikatti Tea Factory ,Kota , Farmers blockade Piccadilly tea factory in protest of quota on green tea purchases
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...