×

புஞ்சை புளியம்பட்டி அருகே ஆடு திருடியவரை மக்கள் முன்னிலையில் எட்டி உதைத்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி அருகே ஆடு திருடியவரை பொதுமக்கள் முன்னிலையில் எட்டி உதைத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ளது காவிலிபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (51). விவசாயி. இவர் தோட்டத்தில் வெள்ளாடுகளை கட்டி வைப்பது வழக்கம். கடந்த 2ம் தேதி பைக்கில் வந்த 2 பேர் இவரது ஆடுகளை திருட முயன்றனர். அப்போது ஆடுகள் அலறி சத்தம்போட்டது. சந்தேகம் அடைந்த நாகராஜ் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது 2 பேர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் கொட்டக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்த குமார் (40) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆடு திருட வந்த குமாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர்.

அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் பொதுமக்கள் முன்னிலையில் ஆடு திருடன் குமாரை காலால் எட்டி உதைத்தார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து ஈரோடு எஸ்பி சசிமோகன் இது குறித்து விசாரணை நடத்தினார்.

அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆடு திருடன் குமாரை பொதுமக்கள் முன்னிலையில் எட்டி உதைத்து உறுதியானது. இதனையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சசிமோகன் உத்தரவிட்டார்.

Tags : punjai pliyambatti , SSI suspended for kicking a goat near Punjai Puliampatti in public
× RELATED புஞ்சை புளியம்பட்டி அருகே பாம்பு,...