பழநி கோயிலில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

பழநி: பழநி கோயிலில் அடாவடி செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இம்மலைக்கோயிலில் குரங்குகள் அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு பழநி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும். கடந்த சில நாட்களாக பழநி மலைக்கோயிலில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இவை பக்தர்கள் கொண்டு வரும் பிரசாதங்கள், உணவுகள், பைகள் போன்றவற்றை பறித்து அட்டகாசம் செய்து வந்தன. இதனைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயிலில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்துமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று பழநி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் மலைக்கோயிலில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்தனர்.

சுமார் 30 குரங்குகள் வரை பிடிக்கப்பட உள்ளதாகவும், பிடிக்கப்பட்ட குரங்குகள் மீண்டும் மலைக்கோயிலுக்கு வர முடியாத வகையில் கொடைக்கானல் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோல் பழநி நகரில் பக்தர்களை ஆசீர்வாதம் செய்து பணம் பெற்று வந்த தனியார் யானையின் உரிமையாளரை எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: