×

நூற்றாண்டு பழமையான மலை ரயில் மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் பயணத்தை துவங்கிய தினம்

குன்னூர்:  நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மலை ரயில்  மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை   1899ம் ஆண்டு தனது முதல் பயணத்தை துவங்கிய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி மலை ரயில் 208 வளைவுகளின் வழியாக வலைந்தும், நெலிந்தும் 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்கிறது.

 இந்த மலை ரயில்  முதல்முறையாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்ட தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1833ம் ஆண்டு ஆங்கிலேயர்  ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சாலை அமைக்கப்பட்டு மாட்டு வண்டி மூலம் பயணம் செய்தனர். பின்னர், 1872ம் ஆண்டில் குதிரை வண்டி மூலம் பயணித்தனர். இயற்கை அழகினையும், குளிரான காலநிலை நிலையையும்  அப்போதைய மதராஸ்பட்டினத்தை ஆட்சி செய்த  ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்ததால் நீலகிரி மாவட்டத்தை கோடை கால தங்குமிடமாக மாற்றினர்.

அதன்பின், அங்கு ரயில் சேவை துவங்க திட்டமிட்டனர். 1880ல்   குன்னூர் ரயில்வே கம்பெனி துவங்கினர். ஆனால், போதிய நிதி கிடைக்காததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர், 1890ம் ஆண்டில் நீலகிரி மலை ரயில் கம்பெனி  பல் சக்கரங்களாலான தண்டவாளம் அமைத்து  குன்னூர் வரை அமைக்கப்பட்டு நீராவி என்ஜின் மூலம்   1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி தனது   முதல்  பயணத்தை துவங்கியது‌.மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கு இடையே பல் சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இந்த மலை ரயில், கடந்த 2005ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயில் மூலம் நீராவி என்ஜின் இயக்கப்பட்டு வருகிறது‌.  மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பயணிக்க ஆன்லைன் முன்பதிவு மட்டுமே என்பதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

அது மட்டுமின்றி மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையே மலை ரயில் கட்டணம் நபர் ஒருவருக்கு  முதல் வகுப்பு  600 ரூபாயும், இரண்டாம் வகுப்பு 295  ரூபாயாக உள்ளது. இதேபோல்,  மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் கட்டணம் 445 ரூபாயும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 190 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் குடும்பத்துடன் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Madupalayam-Gunnur , The day the first journey of the century old mountain train to Mettupalayam-Coonoor started
× RELATED டீசலை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி...