கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகளை அமையுங்கள் : தமிழக அரசு உத்தரவு!!

சென்னை : திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 48 முதுநிலைத் திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் வளாகத்தில் மரத்தினாலான சாய்வுத்தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு அறிவித்திருந்தார்.

அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக மரத்திலான சாய்வுத்தளங்களை அமைத்திட நடவடிக்கை எடுத்திடவும் மேலும், தேவையான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய உடன் நடவடிக்கை எடுத்திடவும் முதுநிலை திருக்கோயில்களில் செயல் அலுவலர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது,

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள்

*முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்

*திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்  

*திருக்கோயில்களில் இதற்காக தனியாக ஒரு பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும்

*சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வுத்தளங்கள் அமைக்கப்பட வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: