×

அம்பத்தூர் அருகே சாலையில் உடைந்து விழுந்த மின் கம்பம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, சீனிவாசா நகர், ஸ்ரீரங்கம் அவன்யூ பகுதியில், மின்வாரியம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சில மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இவை மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் உடைந்து விழும் அபாயம் உள்ளதால், இதனை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், ரங்கம் அவன்யூ 3வது தெருவில் உள்ள சிதிலமடைந்த மின் கம்பம் ஒன்று நேற்று காலை 8.30 மணிக்கு திடீரென உடைந்து தெருவின் குறுக்கே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தீப்பொறி ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் மின் கம்பத்தின் அருகில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மேலும், இந்த தெரு வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று, மின் கம்பம் உடைந்து விழுந்ததை பார்த்து 50 அடிக்கு முன்பே டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். இதனால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், மின்கம்பம் உடைந்து விழுந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, சுமார் அரை மணி நேரம் கழித்து மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், உடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் இதேபோல் பல மின்கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், அவற்றையும் மாற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்,’’ என்றனர்.



Tags : Ambantur , Power pole collapses on road near Ambattur: Public screams and runs
× RELATED தொடர் பைக் திருட்டு ; 3 பேர் கைது