×

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் நலனுக்காக சேவையாற்றியவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று  தமிழக முதலமைச்சரால்  விருதுகள் வழங்கப்பட உள்ளது. அதனால், விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம்  5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும்.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இந்த விருதினை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான சமூக சேவை  நிறுவனம் மற்றும்  சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in  என்கிற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் நகலுடன்  செங்கல்பட்டு  மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில்  தொடர்பு கொண்டு, விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் சேவை பற்றி ஆவணங்களை புகைப்படத்துடன், தமிழ், ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்து வரும்  30ம் தேதி மாலை 5 மணிக்குள், வட்ட சமூக நல அலுவலகம், சிஆர்சி. குறுவள மையக் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு - 603 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu District , Those who have served for the welfare of women in Chengalpattu district can apply for the awards: Collector Information
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...