×

மானாம்பதி வரை இயக்கப்படும் மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்கவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: மானாம்பதி வரை இயக்கப்படும் மாநகரப் பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை அடையாறில் இருந்து திருப்போரூரை அடுத்துள்ள மானாம்பதி வரை தடம் எண் 522 என்ற மாநகர பேருந்து கடந்த 2009ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மானாம்பதி, ஆமையாம்பட்டு, அகரம், பெரியார் நகர், சிறுதாவூர், ஆமூர், முந்திரித்தோப்பு, பஞ்சந்தீர்த்தி உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்தை மானாம்பதியில் இருந்து எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மானாம்பதியில் இருந்து எச்சூர் சந்திப்பு 4 கிமீ தூரம் உள்ளது. எச்சூர் பகுதியை ஒட்டி குழிப்பாந்தண்டலம், புலியூர், புலிக்குன்றம், நெல்வாய், நந்திமாநகர், பங்காருபேட்டை போன்ற கிராமங்களும் உள்ளன. இந்த மாநகரப் பேருந்தை எச்சூர் வரை நீட்டித்து இயக்கினால் மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் வேளாண் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை சென்னை வரை எடுத்துச் செல்ல முடியும்.

மேலும், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கும் பெரும் உதவிகரமாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு பல்வேறு கிராமமக்கள் மாமல்லபுரம் சென்று சுற்றி வரும் கால விரயம் சேமிக்கப்படும்.  சிறுசேரி சிப்காட், ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாகம் தற்போது அடையாறில் இருந்து திருப்போரூர் வழியாக மானாம்பதி வரை இயக்கும் தடம் எண் 522 என்ற பேருந்தை எச்சூர் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்ற பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து உள்ளது.



Tags : Manampathy ,Echuru , City bus to Manampathy to be extended to Echuru: Public demand
× RELATED திருப்போரூர் - திருக்கழுக்குன்றம்,...