புதுசத்திரம் பகுதி கூவம் ஆற்றில் ரூ30 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புதுசத்திரம் பகுதியில் சேதமடைந்த தடுப்பணையை ரூ30 கோடி மதிப்பீட்டில் சீரமைத்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பணியை துரிதப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியை வாழ்ந்து வருகின்றனர். இங்கு நெல், கரும்பு, பூக்கள், காய்கறிகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான விவசாய நிலங்கள் கூவம் ஆற்றில் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் ஏரி பாசனங்களை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்யும்போது அங்குள்ள கேசாவரம் அணையில் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் உபரி நீரானது கூவம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் நீரானது கேசாவரத்திலிருந்து புதுமாவிலங்கை, அதிகத்தூர், மணவாள நகர், புட்லூர், அரண்வாயல், புதுசத்திரம் மார்க்கத்தில் வந்து, சோரஞ்சேரி, திருவேற்காடு, கோயம்பேடு வழியாக 72 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கேசாவரம் அணையிலிருந்து கூவம் ஆற்றில் வரும் நீரானது திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரத்தில் உள்ள தடுப்பணையில் நீர் சேகரிக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்பி விடப்படும். கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பியது. ஆனால் புதுசத்திரம் அருகே உள்ள தடுப்பணை கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முற்றிலும் சேதமடைந்ததது. இதனால் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கேசாவரம் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரானது வீணாக கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் புதுசத்திரம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. மாவட்டம் முழுவதும் ஏற்பட்டு வரும் குடிநீர் பிரச்னையை போக்க கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் கூடுதல் தடுப்பணைகள் கட்டவும், சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்கவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக திமுக அரசு தடுப்பணை கட்ட தீர்மானித்து ரூ30 கோடி மதிப்பீட்டில் 140 அடி நீளத்திலும், 12 அடி உயரத்திலும் கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி புதுசத்திரத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த தடுப்பணையில் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் தெரிவித்தார். மேலும் இந்த புதுசத்திரம் தடுப்பணையில் சேகரிக்கப்படும் மழைநீரால் புதுசத்திரம், கொட்டாம்பேடு, திருநின்றவூர், கூடப்பாக்கம், ஜமீன் கொரட்டூர், பெருமாள்பட்டு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் ஆதாரம் பெருகும் என்பதாலும், கிணறுகளில் அதிகளவில் நீர் ஊற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் விவசாய நிலங்களில் பயிரிட தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்காது என்பதால் விவசாயிகளும் மிகுந்து மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே விவசாயிகளும் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்

Related Stories: