ஒளிபரப்பு உரிமம்: ஐபிஎல் புதிய உச்சம்...

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் ஒளிபரப்பு உரிமம் ரூ48,390 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதன் மூலமாக ‘பிராண்ட் ஐபிஎல்’ புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டிகளின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மீடியா உரிமம் (2023-27) பெறுவதற்கான ஆன்லைன் ஏலம் நேற்று முன் தினம் தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில், டிவி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார், ரிலையன்சின் வியாகாம் 18, டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனங்கள் மொத்தம் ரூ48,390 கோடிக்கு வாங்கியுள்ளன.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்த கிரிக்கெட் வாரிய செயலர் ஜெய் ஷா, ‘ஐபிஎல் போட்டிகளின் டிவி நேரடி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா ரூ23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ23,758 கோடிக்கும் வாங்கியுள்ளதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் கொரோனா நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருந்த நிலையிலும், இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பதை பிசிசிஐ-ன் நிர்வாகத் திறனுக்கு கிடைத்த கவுரமாகக் கருதுகிறேன். ஐபிஎல் அறிமுகமான நாளில் இருந்தே இந்த தொடரின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பொன்னான நாள். இ-ஏலத்தில் மொத்தம் ரூ48,390 கோடி கிடைத்திருப்பதன் மூலமாக ‘பிராண்ட் ஐபிஎல்’ புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த வருவாய், உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செலவிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: