ரூ.2,877 கோடி மதிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தரத்தில் நவீன திறன் பயிற்சி; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டாடா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை ரூ.2,877 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலத்துறை செயலாளர் முகமது நசிமுதின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வீரராகவ ராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் ராமதுரை, தலைமை நிதி அலுவலர் சவிதா பாலசந்திரன், தலைவர் சுசீல்குமார், மனிதவள மேலாண்மை தலைவர் பவன்பகேரியா, கல்வி மற்றும் திறன் மேம்பாடு இயக்குனர் புஷ்கராஜ்கால்குட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில், தற்போது 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன. இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

Related Stories: