×

பினராய்க்கு கருப்பு கொடி காட்டியதால் காங். அலுவலகம் மீது குண்டு வீச்சு; கேரளாவில் பதற்றம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் விமானத்திற்குள் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கோழிக்கோடு அருகே காங்கிரஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் குண்டுகளை வீசியதால் பதற்றம் நிலவுகிறது. கேரள முதல்வருக்கு எதிராக சொப்னா கூறிய தங்கம், கரன்சி கடத்தல் புகாரை தொடர்ந்து, எதிர்கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பினராய் விஜயன் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்பட கட்சியினர் சாலை மறியல் உட்பட பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பினராய் விஜயன் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை பினராய் விஜயன் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமானம் தரையிறங்கிய உடன் விமானத்தில் பயணம் செய்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த மஜீத், நவீன்குமார் திடீரென எழுந்து பினராய் விஜயனுக்கு எதிராக கோஷமிட்டனர். பினராய் விஜயனின் அருகே சென்ற அவர்களை விமானத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜன் பிடித்து கீழே தள்ளினார். இதற்கிடையே விமானத்தில் வைத்து முதல்வர் பினராய் விஜயனை இளைஞர் காங்கிரசார் கொல்ல முயற்சித்ததாக கூறி சிபிஎம் தொண்டர்கள் கேரளா முழுவதும் கண்டன பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சூறையாடப்பட்டது.

பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். பத்தனம் திட்டா, ஆலப்புழா உள்பட பல பகுதிகளில் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கண்ணூர் அருகே பையனூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வெளியே இருந்த காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர்கள் வீடுகள் மீதும் கற்கள் வீசப்பட்டன. நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் கோழிக்கோடு அருகே உள்ள பேராம்பிரா என்ற இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது மர்ம கும்பல் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியது.

இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  காங்கிரஸ் கொடிக்கம்பங்களும் சேதப்படுத்தப்பட்டன.  இதற்கிடையே காங்கிரஸ் தொண்டர்களை விமானத்தில் வைத்து ஜெயராஜன் தாக்கியதை கண்டித்து நேற்று கேரளா முழுவதும் காங்கிரஸ் கருப்பு தினமாக அனுசரித்தது. நேற்று காங்கிரஸ் பா.ஜ., ஆர்எஸ்பி கட்சி நடத்திய ேபாராட்டங்களில் வன்முறை வெடித்தது. கொல்லத்தில் ேபாராட்டம் நடத்திய புரட்சி சோசியலிஸ்ட் கட்சியினர் மீது போலீசார் நடத்திய தடியடியில் கட்சி எம்பி பிரமேசந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் ெதாடுபுழாவிலும் போலீசர் நடத்திய தடியடியில் 4 காங்கிரஸ் தொண்டர்கள் காயமடைந்தனர்.

Tags : Kong ,Binarai ,Kerala , Kong showed the black flag to Binarai. Bombing of office; Tension in Kerala
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தலில் 4 கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்கள்!