×

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் கொடுத்து 10 ரூபாய் திரும்ப பெறலாம்: தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது

வேலூர்: வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை லேபிளுடன் வழங்கினால் ரூ.10 வழங்கும் திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது.
தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 15 முதல் 25 சதவீத டாஸ்மாக் மதுபான கடைகள் மலைவாசஸ்தலங்களிலும், வனப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ளன. பிற கடைகள் நகர்ப்பகுதிகளை தவிர்த்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், கிராமப்புறங்களிலும் அமைந்துள்ளன. மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், தாங்கள் மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசியோ செல்கின்றனர்.

இதனால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. அதேபோல் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வனவிலங்குகளை பாதிக்கின்றன. கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் வீசப்படும் மதுபாட்டில்களால் பொதுமக்கள் காயமடைவதும், விவசாய நிலங்கள் பாதிப்படைவதும் தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டு ஒரு மாவட்ட நிர்வாகம் புதுமையான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி குடிமகன்கள் வாங்கும் மதுபாட்டிலுடன் ரூ.10 சேர்த்து வசூலிக்கப்படும். மது அருந்தி முடித்த பின்னர் காலி பாட்டிலை அதன் எக்சைஸ் வரி லேபிள் கொண்ட மூடியுடன் திருப்பித் தந்தால் ரூ.10 திருப்பி வழங்கப்படும். பாட்டிலை திருப்பித்தராத நிலையில் குடிமகனிடம் வசூலிக்கப்பட்ட ரூ.10 டாஸ்மாக் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

அதேபோல் குடிமகன்களால் பார்களில் காலியாகும் மதுபாட்டில்களை பார் நடத்துனர்கள் எடுத்துக்கொண்டு, அதில் ஒட்டப்பட்டுள்ள எக்சைஸ் ஸ்டிக்கர் தனியாக எடுத்து டாஸ்மாக் பணியாளரிடம் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இதனால் பாட்டில்கள் வனப்பகுதிகளிலும், மலைவாசஸ்தலங்களிலும் உடைக்கப்படுவதும், வீசப்படுவதும் குறைந்துவிடும். இத்திட்டத்துக்கு அம்மாவட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி பீமகுளத்தில் ஒரு கடையும், சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் 3 கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் 2 கடைகளும், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் ஒரு கடையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்னாமரத்தூரில் ஒரு கடையும் அடையாளம் காணப்பட்டன.

இம்மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்களிடம் அந்தந்த மாவட்ட பெயர்கள் அச்சடித்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அங்குள்ள மலை மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில் அனுப்பி வைக்கப்படும் போது அதனுடன் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்படும். இந்நடைமுறை நாளை தமிழகத்தில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்பாட்டுக்கு வருகிறது.



Tags : Tamil Nadu , Wilderness, Tasmac Store, Empty Wine Bottle,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...