முதல்வர் ரங்கசாமியை அவமதித்த விவகாரம்: அரசு பணியாளர் கூட்டமைப்பினர் கவர்னர் மாளிகையை திடீர் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியை பாஜக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி நெட்டித் தள்ளிய சம்பவம் சமூக வலைதளத்தில் பரவி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி வருகிறது. இவ்விவகாரத்தை ஆளுங்கட்சியான என்ஆர் காங்கிரஸ் பெரிதுபடுத்த தேவையில்லை என கூறிவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

  முதல்வரை அவமதித்த காவல்துறை அதிகாரி மீது மட்டுமின்றி இதை வேடிக்கைப் பார்த்த பாஜக அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனிடையே இன்று அரசு பணியாளர் நல கூட்டமைப் பினர் தலைவர் சரவணன் தலைமையில் 35க்கும் மேற்பட்டோர் பாரதி பூங்கா அருகில் திரண்டனர். பின்னர் அங்குள்ள பேரிகார்டுகளை தள்ளிபோட்டுவிட்டு திபுதிபுவென தடைகளை மீறி எகிறிகுதித்து கவர்னர் மாளிகை முன்பு வந்து நுழைவு வாயிலில் முற்றுகையில் ஈடுபட்டனர்.  முதல்வரை அவமதித்த காவல்துறை அதிகாரி மீது கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் கவர்னரை இவ்விவகாரம் தொடர்பாக சந்தித்து முறையிட வேண்டுமென கோஷமிட்டனர். இதனிடையே தகவல் கிடைத்து வந்த பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அவர்களின் சட்டையை பிடித்து இழுத்து அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசாருக்கும், போராட்டக்குழுவுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அங்குவந்த கிழக்கு காவல்சரக எஸ்பி வம்சித ரெட்டி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முற்றுகையை கைவிட்ட அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. முதல்வர் அவமதிப்பு விவகாரம் புயலை கிளப்பியுள்ளதால் மற்ற கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: