×

எண்ணூர் மிகு உய்ய அனல் மின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி

சென்னை: எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய  அனல் மின் திட்டம் (2x660 மெகாவாட்) செயலாக்கப் பணிகளை  மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,  இயக்குநர்   (திட்டம்) ஆர்.எத்திராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மின்சாரத் துறை அமைச்சர் இந்த திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும், பிரதான இயந்திரங்கள் கொதிகலன், சுழலி-I &II, மின்னாக்கி மற்றும் கட்டுப்பாட்டு அறை, நீர் குளிருட்டும் கோபுரம் மற்றும் ESP கட்டுப்பாட்டு அறை, குளிர் நீரேற்றிமனை, குளிர்ந்த நீர் பாதை அமைக்கும் பணி,  400 கிலோ வோல்ட் வளிம காப்பு துணை மின் நிலையம் (GIS) முதலியவற்றின் அமைப்பியல் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். தற்போது நடைபெற்று வரும் அமைப்பியல் சார்ந்த அனைத்து கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிவடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அலுவலர்கள் தெரிவித்தனர்.

நேரடி ஆய்விற்கு பின் அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார்கள். அதில் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டார். 25.10.2021-ல் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்ட பணி நிறைவுக்கான அட்டவணையை தவறாது பின்பற்றுவதற்கு  உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், திட்டத்தின் மற்ற இதர பணிகளான கரி கையாளும் அமைப்பு, சாம்பல் கையாளும் அமைப்பு, கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பு ஆகிய அமைப்புகளுடன் கூட்ட அரங்கில் ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படி தொழில் துறையில் முன்னேற்றம் கண்டு வரும் தமிழகத்தின் எரிசக்தி தேவையின் தன்னிறைவை கருத்தில் கொண்டு கட்டுமானத்தில் இருக்கும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய  அனல் மின் திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

பின்னர் மின்சாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களுடன் பேசுகையில்:
இத்திட்டத்தில் இரண்டு யூனிட் 660 மெகாவாட் என மொத்தம் 1,320 மெகாவாட் 2010-ம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.  இத்திட்டம் மார்ச் 2018-ம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும்,  தற்போது 53 விழுக்காடு மட்டும் தான் பணிகள் முடிந்துள்ளது.  மீதமுள்ள பணிகள் விரைவாக முடித்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவுகளை வழங்கியுள்ளார்கள். ரூபாய் 7,800 கோடி மதிப்பிலான இந்த சிறப்பு திட்டம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்குகின்றபோது  நம்முடைய மின் தேவை பூர்த்தி செய்யப்படும்.  

2010-ல் தொடங்கப்பட்டு 2018-ல் முடிக்க வேண்டிய  இத்திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் முடிவுபெறவில்லை.  இந்த ஒப்பந்தத்தை எடுத்துள்ள BHEL  நிறுவனத்திடம் பணியாட்களை அதிகப்படுத்தி பணிகளை மிக விரைவாக முடித்திட வேண்டும் என்று எடுத்து சொல்லியிருக்கிறோம். முதல் யூனிட் மார்ச் 2024-ல் உற்பத்தியை தொடங்குவதற்காக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 2024-ல் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும்.    

வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த உற்பத்தியை நிறுவுதிறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பணிகளை விரைவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தினுடைய தொழில்துறை வளர்ச்சி வரக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கு விரைவான மின் இணைப்பைக் கொடுக்க வேண்டும், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார். நிலக்கரி ஏறத்தாழ நான்கு கப்பல்களில்  வந்துள்ளது, இன்னும் இரண்டு கப்பல்கள் தான் வரவேண்டியுள்ளது. என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


Tags : Nilur Mikhu ,Minister of Electricity ,V.R. Senthil Balaji , Senthil Balaji, Minister of Power and Energy, Ennore
× RELATED நெல்லை, தூத்துக்குடியில் மின்...