ஆளுநர் ஆர்.என்.ரவியா ஆர்.எஸ்.எஸ். ரவியா?..திருமாவளவன் காட்டம்

கரூர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இயங்கிக்கொண்டு இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் தோகைமலையில் திருமாவளவன் அளித்த பேட்டி:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு பேச்சிலும் அவர் தன்னை ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்று காட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்றுவதுதான் பொருத்தமானது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் என்பதை ஆளுநருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவருடைய போக்கு மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு அணுகுமுறை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர்

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறிஸ்துவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2%, கிறிஸ்துவர் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4% மட்டுமே  உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால்  இதுவரை கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இந்நேரத்தில் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும். எனவே, எதிர்க்கட்சிகள்  தமது பொது வேட்பாளராகக் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: