3 ஆண்களிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு; ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு: லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: மூன்று ஆண்களிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட வழக்கில் சிக்கிய ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் கெவின் ஸ்பேசியை நீதிமன்றத்தில் ஆஜராக லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரும், ஆஸ்கார் விருது பெற்றவருமான கெவின் ஸ்பேசி (62), கடந்த 2005, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று ஆண்களை கட்டாயத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு கொண்டதாக புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன.

இவ்விவகாரம் தொடர்பாக கெவின் ஸ்பேசிக்கு எதிராக லண்டன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கை லண்டன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கெவின் ஸ்பேசி, மூன்று ஆண்களிடம் பாலியல் உறவு கொண்ட வழக்கில் அவர் நாளை மறுநாள் (வியாழன்) 10 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்’ என்றார். முன்னதாக கெவின் ஸ்பேசி, கடந்த 1980ம் ஆண்டு வாக்கில் ஹாலிவுட்டில் நுழைந்தார். கடந்த 1995ல் வெளியான படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அதன்பின் 1999ம் ஆண்டு அவருக்கு மற்றொரு படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவர் மீது கடந்த 2017ம் ஆண்டு வாக்கில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் சினிமாவில் நடிப்பதில் தவிர்த்தார். சில ஆண்டுகள் வெளியுலகில் தலைகாட்டவில்லை. சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: