×

பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி: வெங்கல் அருகே 2 பேர் படுகாயம்

ஊத்துக்கோட்டை: வெங்கல் அருகே பைக்குகள்  நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 2 பேர் பலியானார்கள். இவர்களுடன் சென்ற 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த கல்பட்டு பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (35). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (30). இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து தன்னுடன் வேலை செய்யும் சங்கர் என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு கல்பட்டு நோக்கி ஹரிகிருஷ்ணன் புறப்பட்டார்.

இதேபோல் மெய்யூர் கிராமத்தில் இருந்து டிரைவர் தியாகு (30) என்பவர்,  தனது பைக்கில் பிரபாகரன் என்பவரை ஏற்றிக்கொண்டு வெங்கல் நோக்கி புறப்பட்டார். சீத்தஞ்சேரி - வெங்கல் காட்டு சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே வந்துபோது, எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன், தியாகு ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.  பைக்குகளின் பின்னால் அமர்ந்திருந்த பிரபாகரன், சங்கர்  ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும்  வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சங்கர், பிரபாகரனை சிகிச்சைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Vengal , Bike accident, death, injury
× RELATED சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் கேமரா...