×

சாஸ்திரிபவன் முற்றுகை கே.எஸ்.அழகிரி உட்பட 250 பேர் மீது வழக்கு பதிவு: நுங்கம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலீசாரின் தடையை மீறி சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 250 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். இதனால் பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் அனைத்து மாநல தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவனில் இயங்கி வரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் போலீசாரின் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பிறகு போலீசாரின் தடையை மீறி சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.

இதனால் போலீசாருக்கும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் ேக.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா உட்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் மாலை விடுவித்தனர்.

அதைதொடர்ந்து போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா உட்பட 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 250 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஐபிசி 143(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்) சென்னை மாநகர காவல் சட்டம் 41 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Sashribhavan ,K. S.S. ,Analakiri ,Nungambakkam , Shastripavan siege, KS Alagiri, case registration, Nungambakkam police action
× RELATED சனாதனம் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியாது: கே.எஸ்.அழகிரி பேட்டி