×

மீன்பிடிக்க இன்று இரவு கடலுக்கு செல்ல தயார் நிலையில் காசிமேடு மீனவர்கள்

தண்டையார்பேட்டை: மீன்பிடி தடைகாலம் முடிந்ததால், இன்று இரவு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீன்கள்  இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்படும். இதையேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பார்கள். தடைகாலம் முடிந்த பிறகு படகு, வலைகளை சரிசெய்துவிட்டு மீன்பிடிக்க செல்வார்கள். தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று இரவு 8 மணியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.  

இதையடுத்து மீன்பிடிக்க தேவையான ஐஸ் கட்டிகள், வலைகள், சமைத்து சாப்பிட மளிகை பொருட்களை தயாராக வைத்துள்ளனர். கிழக்கு கடற்கரை திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை மீன்பிடிக்க செல்வார்கள்.  61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதங்களாக காசிமேடு மார்க்கெட்டில்  மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் தேவையான மீன்களை வாங்க முடியாமல் திரும்பி சென்றனர்.

தற்போது மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க  இருப்பதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வஞ்சிரம், வவ்வால், கொடுவா, சங்கரா, இறால், கடமா உள்ளிட்ட மீன் கிடைக்கும் என  மீன் வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Kasimedu , Fishing ban, Kasimedu fishermen,
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...