×

அரசு பள்ளியில் குப்பை மூட்டைகள் குவிப்பு ஆசிரியர்களை முற்றுகையிட்டு பெற்றோர் கடும் வாக்குவாதம்-தாசில்தார் சமரசம்; நெமிலி அருகே பரபரப்பு

நெமிலி : நெமிலி அருகே அரசு பள்ளியில் பிளாஸ்டிக் குப்பை மூட்டைகள் குவிக்கப்பட்டிருந்ததால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து ஆசிரியர்களை, பெற்றோர் முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றவும், கின்னஸ் சாதனை புத்தககத்தில் இடம் பெறவும் கடந்த மாதம் ஒரே நாளில் சுமார் 3 மணி நேரத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது. அன்றைய நாளில் மொத்தம் 187 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. அதேபோல் நெமிலி தாலுகாவில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

இந்த பிளாஸ்டிக் குப்பைகளை சுமார் 300 மூட்டைகளில் கட்டி பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி சமையல் அறையின் அருகே மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது.இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. வழக்கம்போல் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். ஆனால் பள்ளி வளாகத்தில் குப்பை மூட்டைகள் இருப்பதையும், துர்நாற்றம் வீசுவதையும் கண்ட அவர்கள், ‘பள்ளி திறக்கும் நாளில் கூட பிளாஸ்டிக் குப்பைகளை ஏன் அகற்றவில்லை.

ஏற்கனவே தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளை எப்படி பள்ளிக்குள் அனுமதிப்பது எனக்கூறி ஆசிரியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த நெமிலி தாசில்தார் ரவி வந்து, மாலைக்குள் குப்பைகளை அகற்றிவிடுவதாக தெரிவித்தார். மேலும் தாசில்தார் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் குமாருக்கு தகவல் அளித்தார். அதன்ேபரில் பள்ளியில் இருந்த குப்பைகள் பேரூராட்சி குப்பை அள்ளும் வாகனங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதையடுத்து காலை 10 மணியளவில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் மாணவர்கள் ஒரு மணிநேரம் தாமதமாக பள்ளியில் முதல் நாள் வகுப்பை தொடர்ந்தனர். இச்சம்பவத்தால் நேற்று அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Dasildar ,Nemili , Nemili: A government school near Nemili refused to send students to school as plastic garbage bins were piled up
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...