உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி-தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா

உடுமலை : உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலியாகின. இதை கண்டித்து உயிரிழந்த ஆடுகளை சாலையில் வீசி உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சி, மாசாணி அம்மன் நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை இவரது தோட்டத்துக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கிருந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் பலியாகின.

வேட்டையாடிய ஆடுகளில் ஒன்றை மர்ம விலங்கு தூக்கிச் சென்றது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த ஆடுகளை தூக்கிக் கொண்டு உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். ஆடுகளின் உடல்களை தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பெரியகோட்டை ஊராட்சி, சின்னவீரம்பட்டி ஊராட்சி, மின் நகர், முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக மர்ம விலங்கு இரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து குதறி வேட்டையாடி வருகிறது. கடந்த மாதம் முத்து நகரை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 80க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு ஒரே நாள் இரவில் வேட்டையாடி கொன்று குவித்தது.

இது குறித்து வனத்துறை, காவல்துறை மற்றும் வேளாண்துறை உள்ளிட்டவற்றில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கை கண்டுபிடித்து அவற்றை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் வனத்துறையினர் மர்ம விலங்கு, தெரு நாய்களாக இருக்கலாம் எனக்கூறி நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். விவசாயிகளின் புகார் மீது காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடைகளை வேட்டையாடும் மர்ம விலங்கு குறித்து கண்டறிய வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: