திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 3-வது நாளில் தாய் உயிரிழப்பு: மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தாமதமானதால் அப்பெண் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் பரக்கத்துல்லா. இவருக்கும், திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், பர்வீன்பானு கர்ப்பமடைந்தார். இந்நிலையில், தனது முதல் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த பர்வீன் பானு, பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த 7-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பர்வீன் பானுவிற்கு கடந்த 11-ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

தாயும்-சேயும் நல்ல உடல்நலத்துடன் காணப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை முதல் பர்வீன் பானு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதுதொடர்பாக உடன் இருந்தவர்கள் பணியில் இருந்த செவிலியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அரைமணி நேரத்திற்கும் மேலாக  மருத்துவர்கள் வராததால் பர்வீன் பானு மயக்கமடைந்தார். இதனையடுத்து மருத்துவர்கள், பர்வீன் பானுவை பரிசோதித்து, பின்பு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி போது பர்வீன் பானு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பணியிலிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் மரணத்திற்கு நீதிகேட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பதட்டம் ஏற்படாமலிருக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: