வால்பாறையில் பருவமழை துவங்கியது

வால்பாறை : வால்பாறை அருகே காயங்களுடன் சிறிய கூண்டில் சிகிச்சை பெற்று வந்த புலியின் உடல் நலம் தேறியது. இதற்கு வேட்டை பயிற்சி அளிக்க நாட்டு கோழி, முயல் பயன்படுத்தப்படுகிறது. வால்பாறை அடுத்து உள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலி உடல் மெலிந்து, முள்ளம்பன்றி வேட்டையின் போது காயங்களுடன் கடந்த 7 மாதங்களுக்கு முன் வனத்துறை வீசிய வலையில் பிடிபட்டது.

அதன்பின் வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனையின் படி மானாம்பள்ளி முகாமில் சிறிய கூண்டில் வைத்து மருத்துவ சிகிச்சை கொடுத்து உணவளித்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இப்புலியை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு செய்த வனத்துறை தலைமை வன பாதுகாவலர், புலியை காட்டில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், புலிக்கு உணவளித்து கண்காணித்து, பிரம்மாண்ட கூண்டு அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ரூ.75 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு, இயற்கையான சூழலில் கூண்டு அமைத்து, அதற்கு வேட்டை திறன் மேம்படுத்த தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கூண்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், மானாம்பள்ளி பீட்டில் பரம்பிக்குளம் அணை கரையோரம் அடர் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள பெரிய கூண்டிற்கு புலி கடந்த 5ம் தேதி கொண்டு செல்லப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் தலைமையில் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா, 2 அடுக்கு கம்பி வலைகள் அமைக்கப்பட்டு, மின்வேலி மற்றும் அகழி பாதுகாப்பில் உள்ள கூண்டில் புலி கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் புலிக்கு வேட்டை பயிற்சி அளிக்க கோழி, முயல் உள்ளிட்டவைகளை வாங்கி கூண்டில் வைத்து உள்ளார். ஊழியர்கள் அவற்றை புலிக்கு அளித்து வேட்டை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: