மனு எழுத ₹50 கட்டணம் வசூல் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடு-ஆட்சியர் மோகன் நடவடிக்கை

விழுப்புரம் : குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வருபவர்களிடம் மனு எழுத கட்டணம் வசூலித்த நிலையில், இலவசமாக மனு எழுதி கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்புநாள் கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்து வருகிறது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்துச்செல்கின்றனர்.

ஆனால், மனு அளிக்க வருபவர்களில் பலரும் எழுத, படிக்கத்தெரியாதவர்கள். அவர்களை பயன்படுத்தி, ஆட்சியர் அலுவலகம் எதிரே மனு எழுதிகொடுப்பதற்காக 10க்கும் மேற்பட்டவர்கள் திங்கட்கிழமைகளில் கடைபோட்டு உட்கார்ந்து விடுகின்றனர். மனுவுக்கு ரூ.50 வீதம் வசூல் செய்துவிடுகின்றனர். இதனால், பலகிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க பணம் செலவிட நேரிடுகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், தனது அலுவலகத்தின் நுழைவுவாயிலில் இலவசமாக மனு எழுதிக்கொடுக்க அறிவுறுத்தி கடந்த சிலமாதங்களாக இந்த நடைமுறை அமலில்இருந்து வந்தது.

ஜமாபந்தி நடைபெற்றதால் குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறவில்லை. நேற்று மீண்டும் இந்த குறைதீர்ப்புக்கூட்டம் துவங்கிய நிலையில் மனுஅளிக்க ஏராளமான பொதுமக்கள்வந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனுஎழுதிக்கொடுக்க யாரும் இல்லாததை அறிந்த ஆட்சியர் உடனடியாக, மகளிர்திட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு அறிவுறுத்தினார்.

அதன்பிறகு, இலவசமாக மனுஎழுதநடவடிக்கை எடுக்கப்பட்டது.இதுகுறித்து, ஆட்சியர் மோகன் கூறுகையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர். அவ்வாறு வரும்பொதுமக்களிடம் மனுஎழுத கட்டணம் வெளியில் வசூலிக்கப்படுவதை அறிந்தேன். இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும்வகையில் இலவசமாக மனுஎழுத இந்த வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

`முதல்வர், அமைச்சர்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை’

விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 295 மனுக்கள் குவிந்தன. அதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பிரதமமந்திரி வீடுகட்டும்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார். முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரிமனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடிதீர்வு காணவும் ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

செல்பி எடுத்து மகிழ்ந்தபொதுமக்கள்...

வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனுஅளிக்கவரும் பொதுமக்களின் மனுக்களை பெறும் ஆட்சியர் மோகன், உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். தகுதியான மனுக்கள் மீது தீர்வு காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இதனிடையே, நேற்று மனு அளிக்க வந்த சிலர் வீட்டிற்கு செல்லும்போது ஆட்சியர் கார் முன்பாக செல்பி எடுத்துக்கொண்டு சென்றனர்.

Related Stories: