குருவிமலை அரசு பள்ளியில் மழலை மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

போளூர் : போளூர் அடுத்த குருவிமலை அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மழலை மாணவர்களுக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை நேற்று முதல் செயல்பட்டன. இதையொட்டி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் முன்கூட்டிேய தூய்மை செய்து, வகுப்பறைகளை தயார் நிலையில் வைக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர்.

அதன்படி போளூர் அரசு பெண்கள் பள்ளியில், நேற்று முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளை மலர் கொடுத்து, சந்தனம் தடவி, கற்கண்டு வழங்கி தலைமையாசிரியர் செ.சுதா வரவேற்றார். புதிய மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பள்ளியில் சேர்க்கை நடந்தது. சேர்க்கை விண்ணப்பங்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.கவிதா சங்கர் வழங்கினார்.

தொடர்ந்து, பெற்றோர்கள், ஆசிரியைகள்  இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அப்போது, பெண்களுக்கு என்னென்ன வகுப்புகள் உள்ளது, அரசு வழங்கும் சலுகைகள், படிப்பு தவிர்த்து தனித்திறமை வளர்த்து கொள்வது ஆகியன எடுத்து கூறப்பட்டது.இதேபோல், குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  2022-2023 ஆண்டுக்கான 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் வே.ஆஞ்சலா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஏ.கீதா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பிரிஸசலில்லா சீமோன் குமார்த்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் அ.நேரு, வட்டார மேற்பார்வையாளர் ப.பாஸ்கரன், ஆசிரியர் பயிற்றுநர் ச.சேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். பின்னர் மாணவர் சேர்க்கை, விழிப்புணர்வு பேரணி நடந்தது. பட்டதாரி ஆசிரியர் சு.மீரா நன்றி கூறினார்.

இதேபோல், திருமலை அரசு ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியர் கா.அமீர்ராஜ் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலசபாக்கம்: தென்மகாதேவ மங்கலம் அரசு பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்  பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எல்.என்.துரை தலைமை தாங்கினார்.

பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி நன்றி கூறினார். மேலும், பள்ளி தொடங்கிய முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: