கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் ஆதிநாராயண பெருமாள் கோயில் அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு-5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

கோபி :கோபி அருகே  பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் வகையாறவிற்குட்பட்ட ஸ்ரீதேவி பூதேவி் சமேத ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோயில் மற்றும் அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு  விழாவில் நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோபியில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்  வகையாறாவிற்குட்பட்ட அங்காளம்மன் கோயில், ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ  ஆதிநாராயண பெருமாள் கோயில் அதே பகுதியில் அமைந்து உள்ளது பழமையான இக்கோயில்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற ஐதீக முறைப்படி ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோயில் மற்றும் அங்காளம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 10 ம் தேதி மங்கள இசை, மகா சுதர்சன ஹோமம், மகா லட்சுமி ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை  மற்றும் விநாயகர் பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.11ம் தேதி வாஸ்து சாந்தி,ரக்சா பந்தனம், காப்பு கட்டுதல், முதலாம் கால யாக பூஜையும், தீபாராதனை நடைபெற்றது.12ம் தேதி மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இரண்டாம் கால யாக பூஜையும், எண் வகை மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நேற்று மங்கள இசையுடன் தொடங்கிய குடமுழுக்கு விழாவில் நான்காம் கால யாக பூஜையடன், யாத்ரா தானம்,நம் பெருமாள் உபய நாச்சியாருடன் கலசங்கள், மகா கும்பங்கள், உப கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத்தொடர்ந்து மூலவர் விமான கோபுரம், ராஜ கோபுரம், ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ராஜ கோபுரம், மூலவர் விமான கோபுரங்களுக்கு ஊற்றி வேதமந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து தசதானம், தச தரிசனம், சாற்று முறை, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதமும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும். சாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.முன்னதாக அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவரும் விழாக்குழுவினருமான பி.என்.நல்லசாமி, கோபி ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், எஸ்.எம்.புகழேந்தி, கோயில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோபி டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, சுபாஸ், சஜினி மற்றும் 10 க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், 100 ககும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Related Stories: