×

கோவில்பட்டி அருகே கோவில் குடமுழுக்கு விழாவிற்கு குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இரும்பு வியாபாரி: ஆர்வத்துடன் ரசித்த கிராம மக்கள்

தூத்துக்குடி: ஹெலிகாப்டரில் செல்லவேண்டும் என்ற சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சொந்த கிராமத்தில் நடந்த கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் சென்று இறங்கிய வியாபாரியை கிராம மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். கோவில்பட்டி அருகே தெற்கு தீதம்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்தோடு ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார். நடராஜனின் குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறி, இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசையாக இருந்து வந்துள்ளது. அந்த ஆசையை நிறைவேற்ற நடராஜன் குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள தனியார் ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு பயணித்தனர். கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த அவர்களை கிராமமக்கள், நண்பர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். நடராஜன் குடும்பத்தினருடன் தரையிறங்கிய ஹெலிகாப்டரை கிராமமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தது மட்டுமன்றி செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து நண்பர்களையும் ஹெலிகாப்டரில் ஏற்றி ஒரு ரவுண்ட் பறந்து சென்று திரும்பியது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற நடராஜன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊருக்கு திரும்புனார்.        


Tags : Kovilbati , Kovilpatti, Crucifixion Festival, Family, Helicopter, Iron Merchant
× RELATED மோடி பெயரை தற்காப்புக்காக ஓபிஎஸ்...